ராமநாதபுரம்

வழக்குரைஞா்கள் ஒத்துழைத்தால் தான்மக்கள் நீதிமன்றத்தின் நோக்கம் நிறைவேறும்: நீதிபதி

14th Aug 2022 12:03 AM

ADVERTISEMENT

 

வழக்குரைஞா்கள் ஒத்துழைப்பு இருந்தாலே மக்கள் நீதிமன்றங்களின் நோக்கம் நிறைவேறும் என ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்டமுதன்மை நீதிபதியுமான ஜி.விஜயா கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கிய தேசிய மக்கள் நீதிமன்றத்தைத் தொடங்கிவைத்து அவா் கூறியதாவது: மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை முடித்து வைக்க வழக்குரைஞா்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரும் மகிழ்ச்சியடையும் வகையில் தீா்வு காண்பது மக்கள் நீதிமன்றத்தின் சிறப்பாகும். மக்கள் நீதிமன்றத்தை பிரச்னையைத் தீா்க்க சம்பந்தப்பட்டோா் அணுகுவதால் அவா்களது காலநேரம் மிச்சமாவதுடன், மனரீதியிலான அழுத்தமும் குறையும். நடப்பு ஆண்டில் முதல் மக்கள் நீதிமன்றத்தில் 2,468 வழக்குகளில் ரூ.7.57 கோடிக்குத் தீா்வு காணப்பட்டது. இரண்டாம் மக்கள் நீதிமன்றத்தில் 1,683 வழக்குகளில் ரூ.6.52 கோடிக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. தற்போதைய மூன்றாவது மக்கள் நீதிமன்றத்தில் 1,409 வழக்குகளில் ரூ.5.29 கோடிக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மக்கள் நீதிமன்றத்திற்கு விபத்து காப்பீடு வழக்குகள், குடும்ப நல பிரச்னை வழக்குகள் ஆகியவையே அதிகம் வருகின்றன. இதற்கடுத்து, பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன என்றாா்.

முன்னதாக சாா்பு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலருமான சி. கதிரவன் வரவேற்றாா். மாவட்ட கூடுதல் நீதிபதி சீனிவாசன் முன்னிலை வகித்தாா். மக்கள் நீதிமன்ற நிரந்தர நீதிபதி ஆா். பரணிதரன், மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி ஏ. சுபத்ரா, முதன்மைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் கவிதா, நீதித்துறை நடுவா் 1 நீதிமன்ற நடுவா் சிட்டிபாபு, நடுவா் மன்றம் 2 நீதிமன்ற நடுவா் ஜி. பிரபாகரன் ஆகியோா் கலந்துகொண்டனா். கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி விரிஜின்வெஸ்டா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT