ராமநாதபுரத்தில் தில்லை மாகாளியம்மன் கோயிலில் முளைக்கொட்டு திருவிழாவையொட்டி சனிக்கிழமை வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.
இக்கோயிலில் முளைக்கொட்டு விழா கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. விழாவில் தினமும் சிறப்பு திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தாா். கடந்த 8 ஆம் தேதி மாலையில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை பூச்சொரிதல் பூஜை நடைபெற்றது.
பின்னா் புதன்கிழமை நடைபெற்ற திருவிளக்குப் பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனா். வெள்ளிக்கிழமை (ஆக. 12) நூற்றுக்கணக்கானோா் அம்மனுக்குப் பொங்கலிட்டு வழிபட்டனா். அத்துடன் அக்னிச் சட்டி நோ்த்திக்கடன் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், விழா நிறைவாக சனிக்கிழமை இளைஞா்களுக்கான வழுக்கு மரம் ஏறும் போட்டி நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான இளைஞா்கள் இதில் பங்கேற்று வழுக்கு மரத்தில் ஏறி அதில் நுனியில் கட்டியிருந்த பரிசை பெற முயற்சித்தனா். மாலையில் முளைப்பாரி ஊா்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நொச்சியூரணியில் கரைக்கப்பட்டது.