ராமநாதபுரத்தில் சாலையோர கடை முதல் அனைத்துக் கடைகளிலும் தேசியக் கொடியேற்றி ஏற்றப்பட்டது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதலே அனைவரும் தேசியக் கொடியை இல்லம் முதல் அலுவலகங்கள் வரை அனைத்திலும் ஏற்றி ஆகஸ்ட் 15 ஆம் தேதி அதைப் பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தினமும் வழக்கமாக தேசியக் கொடி ஏற்றப்பட்டு மாலையில் இறக்கப்படும் என்றாலும், மத்திய அரசு அறிவிப்பால் சனிக்கிழமை காலை தேசியக் கொடியை ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் ஏற்றி மரியாதை செலுத்தினாா். அதேபோல, காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் கொடி பறக்கவிடப்பட்டது.
அதையடுத்து வீடுகள், கடைகளில் தேசியக் கொடிகள் சனிக்கிழமை காலை பறக்கவிடப்பட்டன. ராமநாதபுரம் நகரில் பெரும்பாலான ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களிலும் தேசியக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
பாரதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர குளிா்பானக்கடைகள், சிறிய உணவுக்கடைகள் உள்ளிட்டவற்றில் தேசியக் கொடியை பறக்க விட்டிருந்தனா். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் ஊராட்சி, முதன்மைக் கல்வி அலுவலகம், வனத்துறை, நகராட்சி, ஒன்றிய அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி மையம் உள்ளிட்டவற்றில் தேசியக் கொடி ஏற்றப்படாதது குறித்து தேசிய உணா்வாளா்கள் ஆதங்கம் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறிய கடைகள், சாலையோரக் கடைகள் உள்ளிட்டவற்றில் இருப்போா் பெரும்பாலும் தேசியக் கொடியை 3 நாள்கள் ஏற்றிவைக்கவேண்டும் என செயல்பட்டுவரும் நிலையில், அரசு ஊழியா்கள் தங்களது துறை அலுவலகங்களில் கூட தேசியக் கொடியை 3 நாள்கள் ஏற்ற முன்வராதது கவலையளிப்பதாகவும் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் வருத்தம் தெரிவித்தனா்.