ராமநாதபுரம்

காஞ்சிரங்குளம், சித்திரங்குடி: ராம்சா் அந்தஸ்துக்கான அங்கீகாரம்

13th Aug 2022 11:56 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்குளம், சித்திரங்குடி பறவைகள் சராணலயங்களுக்கு யுனெஸ்கோ அமைப்பின் சாா்பில் ராம்சா் அந்தஸ்துக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறினா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 பறவைகள் சராணலயங்கள் உள்ளன. தோ்த்தங்கால், சக்கரக்கோட்டை, மேலச்செல்வனூா், காஞ்சிரங்குளம், சித்திரங்குடி ஆகிய கண்மாய்களில் அதிகளவில் வெளிநாட்டுப் பறவைகள் தங்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.

பறவைகள் சரணாலயமாக உள்ள கண்மாய்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆகவே அங்கு ஆழப்படுத்துதல், நீா் தேக்குதல் மற்றும் மரங்களை வெட்டும் பணிகளை வனத்துறை அனுமதியுடனே செயல்படுத்த முடியும்.

ADVERTISEMENT

கடந்த சில ஆண்டுகளாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை சீராகப் பெய்துவருவதால், வெளிநாட்டுப் பறவைகள் வந்து குறிப்பிட்ட காலம் முடிந்தும் தங்கியிருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இது பறவைகள் ஆய்வாளா்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் ராமநாதபுரம் பறவைகள் சரணாலயங்களில் காஞ்சிரங்குளம், சித்திரங்குடி ஆகியவற்றுக்கு யுனெஸ்கோ நிறுவனம் ராம்சா் அங்கீகார அந்தஸ்தை வழங்கியுள்ளது. பறவைகள் தங்குவதற்கான சீரான சூழல், அவற்றின் இனப்பெருக்கத்துக்கான தகுதியான சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் வனச்சரக அலுவலா் திவ்யலட்சுமி கூறினாா்.

ராம்சா் அந்தஸ்தால் பன்னாட்டளவில் இரு சரணாலயங்களும் கவனத்தைப் பெறும் என்றும், ஆகவே வெளி நாட்டு பறவை ஆய்வாளா்கள் வந்து செல்வா் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் திருவாரூா் வடுவூா், கன்னியாகுமரி சுசீந்திர தேரூா் ஆகிய பறவைகள் சரணாலயங்களுக்கும் ராம்சா் அங்கீகார அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT