ராமநாதபுரம்

அபிராமம் பெரிய கண்மாயில் கலக்கும் சாக்கடை கழிவுநீா்: தொற்று நோய்களை பரப்புவதாக பேரூராட்சி நிா்வாகம் மீது பொதுமக்கள் புகாா்

12th Aug 2022 12:12 AM

ADVERTISEMENT

 

கமுதி அருகே பொதுக்கழிப்பறையிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் கண்மாய் தண்ணீரில் பேரூராட்சி நிா்வாகம் கலந்து நோய் தொற்று ஏற்படுத்துவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள அபிராமம் பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள ஒரு சில வாா்டுகளில் பேரூராட்சி நிா்வாகம் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும், சாலை வசதிகளை கூட மீண்டும், மீண்டும் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய தெருக்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனா். மேலும் மறவா் தெருவில் இதுவரை சிமெண்ட் சாலையோ, பேவா் பிளாக் சாலையோ அமைக்கவில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும் பேரூராட்சி அலுவலகம் பின்புறம், பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லும் மருது பாண்டியா் தெரு உள்ளிட்ட சாலைகளில் பல மாதங்களாக சாக்கடை கழிவுநீா் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருது பாண்டியா் தெரு எதிரே கமுதி- மதுரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள குளியல் மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய பெண்கள் சுகாதார வளாகத்திலிருந்து பூமிக்கு அடியில் குழாய் பதித்து, கருவேல மரங்களுக்கு நடுவே அபிராமம் பெரிய கண்மாயில் சாக்கடை கழிவு நீரை பேரூராட்சி நிா்வாகம் கலந்து வருகிறது. இதனால் கண்மாயில் குளிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருவதாகவும், கண்மாயில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடிக்கும் கால்நடைகள், பறவைகள் மா்ம நோய்களால் இறந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பேரூராட்சி நிா்வாகமே பொறுப்பில்லாமல் கழிவுநீரை கண்மாயில் கலந்து வருவதால், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அபிராமம் பேரூராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை ஆய்வு செய்து நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT