ராமநாதபுரம்

பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

வடமேற்கு வங்கக் கடல் மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

தெற்கு ஒடிஸா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையோரம் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, ஒடிஸா மாநிலம் புவனேஷ்வருக்கு சுமாா் 70 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசைகளில் நகா்ந்து சத்தீஷ்கா் மாநிலம் அருகே புதன்கிழமை வலுவிழக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்களுக்கு தொலை தூர எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

மன்னாா் வளைகுடா மற்றும் வங்கக் கடலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வீசி வரும் சூறைக்காற்று காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் தொடா்ந்து 8 ஆவது நாளாக மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT