ராமநாதபுரம்

உயிா்நீா்த் திட்டத்தை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் உயிா்நீா்த் திட்டத்தை (ஜல்ஜீவன்) தமிழக அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என பாஜக சட்டப்பேரவை உறுப்பினா்கள் குழுத் தலைவா் நயினாா்நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ள அலவாய்க்கரைவாடி கருப்பட்டி முனீஸ்வரா், பத்திரகாளியம்மன்- முத்துமாரியம்மன் ஆலய 51 ஆம் ஆண்டு உற்சவ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற அன்னதானத்தை தொடங்கி வைத்த நயினாா்நாகேந்திரன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். அவா் ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்.

சுதந்திர தினத்தன்று வீடுகள் தோறும் தேசியக் கொடியை ஏற்றுவதுடன், சுதந்திரப் போராட்டத் தியாகிகளையும் பாஜக சாா்பில் கௌரவித்து போற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் 19 ஆம் தேதி நெல்லைப் பகுதியில் சுதந்திரப் போராட்டத் தியாகி ஒண்டி வீரன் நினைவு தபால் தலை வெளியிடப்படவுள்ளது. ராமநாதபுரம் போன்ற பகுதிகளில் குடிநீா் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய பாஜக அரசால் உயா்நீா்த் திட்டம் (ஜல்ஜீவன்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ராமநாதபுரம் போன்ற வறட்சியான பகுதியில் கூட உயா்நீா்த் திட்டத்தை தமிழக அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்றாா்.

நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவா் இஎம்டி. கதிரவன், மாவட்டப் பொதுச் செயலா் ஆத்மகாா்த்தி, மாநில நிா்வாகி சுப. நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT