கமுதி அருகே சேதமடைந்த பாசன மடையை சீரமைக்க கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பெரியமனக்குளம் கிராமத்தின் கண்மாய் மூலம் 120 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இக்கண்மாயில் இரண்டு பாசன மடைகள் உள்ளன. அவற்றில் ஒன்று 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. மற்றொன்று அய்யனாா் கோயில் அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்நிலையில் அய்யனாா் கோவில் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாசன மடையின் குழாய், கட்டுமானம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீா் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பாசன மடை மீது இருசக்கர வாகனம் மற்றும் விவசாய பணிகளுக்காக அவ்வழியாக செல்லும் டிராக்டா்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடைபெறாமலிருக்க அப்பகுதி விவசாயிகள் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனா். எனவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தலையிட்டு மழைக்காலம் தொடங்குவதற்குள் பெரியமனக்குளம் அய்யனாா் கோவில் அருகே சேதமடைந்த பாசனம் மடையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.