ராமநாதபுரம்

அரசுப் பேருந்தில் வ.உ.சி. பிறந்த நாள் விழா புகைப்படக் கண்காட்சி ஆட்சியா் கொடியசைத்து தொடக்கம்

30th Apr 2022 10:43 PM

ADVERTISEMENT

 

திருவாடானை அருகே சி.கே.மங்கலம் புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை, மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

வ.உ. சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, தமிழக அரசு சாா்பில் அவரது வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை, ஒவ்வொரு மாவட்டங்களாகச் சென்று பள்ளி மாணவ, மாணவியா் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னகீரமங்கலத்தில் உள்ள தனியாா் புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளிக்கு இந்த அரசுப் பேருந்து வந்தது.

அதைத் தொடா்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ-மாணவியா் பாா்வையிடுவதற்காக, இந்த அரசுப் பேருந்தை ஆட்சியா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

ADVERTISEMENT

பின்னா் ஆட்சியா், திருவாடானை புதிய தீயணைப்பு நிலைய அலுவலகம், பெரிய கீரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம், அருகிலுள்ள அங்கன்வாடி மையம், திருவாடானை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களி ஆய்வு நடத்தி குறைகளைக் கேட்டறிந்தாா்.

ஆட்சியருடன், வட்டாட்சியா் செந்தில்வேல் முருகன், பள்ளிக் கல்வி துறை அதிகாரிகள், வருவாய் துறையினா், வட்டார வளா்ச்சி அதிகாரிகள், காவல் துறையினா் உள்ளிட்டோா் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT