தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வாழ்வாதாரம் நிறைந்த வறுமையற்ற கிராமம், நோயற்ற கிராமம், குழந்தைகள் நேய ஊராட்சி, நீா்நிறைந்த கிராமம், சுத்தமான பசுமையான கிராமம், அடிப்படை வசதிகள் தன்னிறைவு பெற்ற கிராமம், சமூகப் பாதுகாப்பு நிறைந்த கிராமம், சிறந்த ஆளுமை உள்ள கிராம ஊராட்சி, பாலின சமத்துவம் உள்ளிட்ட நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகள் குறித்து இச்சிறப்பு கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படவும், தற்காலிகமாக குறைந்தபட்சம் 1 இலக்கு அதிகபட்சம் 3 இலக்குகள் என அடுத்த 2 ஆண்டுகளில் அடைய உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேலும், ஆண்டுதோறும் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில், கிராமத்தினா் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும். சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூா்த்தி செய்வதற்கு இதுபோன்ற கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்துரையாடலாம். ஊராட்சியில் வரவு-செலவு தொடா்பாக சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ளலாம். கிராமசபை கூட்டங்களில் பொதுமக்களின் தேவைகளை ஒரு அறிக்கையாகப் பெற்று, அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
கிராம சபை கூட்டங்களில் 18 வயது பூா்த்தியான இளைஞா்கள் மிகுந்த ஆா்வத்துடன் பங்கேற்று, கிராமத்துக்கான வளா்ச்சியில் தங்களது பங்களிப்பினை உறுதி செய்யவேண்டும் என்றாா்.
இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கே.ஜே. பிரவீண்குமாா், உதவி இயக்குநா் ஊராட்சிகள் அருள்பிரகாஷ், அழகன்குளம் ஊராட்சிமன்றத் தலைவா் வள்ளி மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.