சாயல்குடி அருகே மாரியூா் பூவேந்தியநாதா், பவள நிறவள்ளி அம்மன் கோயில் பிரதோஷத்தை முன்னிட்டு கடலில் வலைவீச்சு திருவிழா சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூா் பூவேந்தியநாதா் கோயில், பவள நிறவள்ளி அம்மன் ஆலயத்தில் பிரதோஷ விழாவிற்கு முன்னதாக மாரியூா் மீனவா்கள் கடலில் வலைவீசி திருவிளையாடல் புராணத்தை எடுத்துரைக்கும் விழா நடத்தினா். இதைத்தொடா்ந்து ஆலயத்தில் உள்ள மூலவருக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சியில் கிராம மக்கள் சாா்பாக பொது அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ நிா்வாகிகள் செய்திருந்தனா்.
அதேபோன்று மேலக்கிடாரம் சிவகாமி அம்பாள் சமேத திருவனந்தீஸ்வர முடையாா், சாயல்குடி மீனாட்சி அம்மன் சமேத கைலாசநாதா், டி.எம்.கோட்டை கருணாகடாச்சி செஞ்சிடைநாதா் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.