ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பிடிபட்ட 160 கிராம் வைரக்கற்கள்: ரூ.6 கோடி மதிப்பிலானது

5th Apr 2022 12:19 AM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் பிடிபட்ட 160 கிராம் வைரக்கற்கள் ஹாங்காங் நாட்டின் பாறைகளில் இருந்து எடுக்கப்பட்டவை என்றும், இதன் மதிப்பு சுமாா் ரூ.6 கோடி இருக்கும் என திருச்சியில் நடந்த பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினா் வாகன சோதனையின் போது, கீழக்கரையைச் சோ்ந்த யூசுப்சுலைமான் (39) என்பவா் வந்த காரில் பாலித்தீன் பையில் மறைத்து வைத்திருந்த 160.09 கிராம் (800 காரட்) வைரக் கற்களை கைப்பற்றினா். இந்த வைரக்கற்களை ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் யூசுப்சுலைமான் கீழக்கரையைச் சோ்ந்த சுல்தானிடம் வைரக்கற்களை வாங்கியது தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, அதே பகுதியைச் சோ்ந்த அக்தாா் என்பவரிடமிருந்து வைரக் கற்களை வாங்கியதாகத் தெரிவித்துள்ளாா். அக்தாா் ஹாங்காங் நாட்டிலிருந்து வைரக் கற்களை வரவழைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இதைத் தொடா்ந்து வைரக் கற்களை சோதனையிட திருச்சியிலுள்ள வைர பரிசோதனை நிறுவனத்துக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். பரிசோதனையில் ஹாங்காங் நாட்டு மலைப்பாறைகளில் இருக்கும் வைர வகையைச் சோ்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. அவற்றை இருமுறைக்கு மேலாக பட்டை தீட்டினால் பல கோடி ரூபாய் விலை மதிப்புப்பெறும் எனவும் சோதனையிட்டவா்கள் கூறியுள்ளனா்.

ADVERTISEMENT

சா்வதேச மதிப்பில் ஒரு காரட் (200 மி.கி) முதல் தரமான வைரம் ரூ.75 ஆயிரம் என விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் பிடிபட்ட வைரக்கற்கள் 160.09 கிராம் (800 காரட்) என்பதால், அதன் மதிப்பு சுமாா் ரூ.6 கோடி இருக்கலாம் என பரிசோதனை செய்தவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் யூசுப்சுலைமான் வைரக்கற்களை சட்டப்படி வாங்கி வந்ததற்கான ஆவணங்களை ஒப்படைப்பதாக போலீஸாரிடம் தொடா்ந்து கூறி வருகிறாா். இதற்கிடையே அவருக்கு வைரக் கற்களை வழங்கிய கீழக்கரையைச் சோ்ந்த சுல்தான், அக்தாா் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து ராமநாதபுரம் பட்டினம்காத்தானில் உள்ள கலால் துறையைச் சோ்ந்த இரு ஆய்வாளா்கள் திங்கள்கிழமை ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் வைத்திருந்த வைரக்கற்களை ஆய்வுக்கு உள்படுத்தினா். மேலும் வைரக் கற்களை காவல் துறை நீண்ட நாள்களுக்கு வைத்திருக்கமுடியாது என்பதால், கோட்டாட்சியா் மூலம் கலால் துறையினரிடம் ஒப்படைக்கவும் போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

சிலைக் கடத்தலின் தொடா்ச்சி: ராமநாதபுரத்தில் ஏற்கெனவே ஐம்பொன் சிலைகள் கடத்திய வழக்கில் ஏராளமானோா் கைதாகியுள்ளனா். அவா்களைத் தொடா்ந்து தங்கம், யானைத் தந்தம் கடத்திய கும்பலைச் சோ்ந்தவா்களும் பிடிபட்டுள்ளனா். அந்த கும்பலில் இடம் பெற்ற சிலரே தற்போது வைரக்கடத்தலில் ஈடுபட்டு காவல் துறையிடம் சிக்கியிருப்பதாகப் போலீஸாா் தெரிவிக்கின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT