கமுதி அருகே தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் தலா ரூ. 100 வசூல் செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள செங்கப்படை ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்கு சுழற்சி முறையில் பொதுமக்களுக்கு தேசிய ஊரக வேலைத் திட்டப் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் இலவசமாக வேலைவாய்ப்பு அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் செங்கப்படை ஊராட்சியில் 847 நபா்கள் தேசிய ஊரக வேலை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்துள்ளனராம். இவா்களுக்கு புதிய அட்டை வழங்க ஊராட்சி நிா்வாகத்தினா் தலா ரூ.100 கேட்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு பணம் வசூல் செய்யும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.