ராமநாதபுரம் நகராட்சியில் சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் நடப்பாண்டு மாா்ச் வரையில் ரூ.4 கோடி வசூலாகியிருப்பதாக ஆணையா் ஆா். சந்திரா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் 33 வாா்டுகளிலும் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு பொதுமக்கள் வரிகளைச் செலுத்துவது அவசியமாகும். அதன்படி ஆண்டுக்கு நகரில் சொத்துவரியாக ரூ.4 கோடி, காலிமனையிட வரியாக ரூ.9 லட்சம், தொழில் வரியாக ரூ.47 லட்சம், குடிநீா் வரியாக ரூ. 81 லட்சம், வரியில்லா இனங்களில் இருந்து ரூ.1 கோடியே 76 லட்சம், குப்பை வரியாக ரூ. 45 லட்சம், புதை சாக்கடை வரியாக ரூ.1 கோடியே 39 லட்சம் வருவாய் கிடைக்கவேண்டும்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால் கடந்த இரு ஆண்டுகளில் (2020, 2021) வரிகளை மக்கள் முழுமையாகச் செலுத்தவில்லை. ஆகவே நிலுவை வரிவசூலையும் சோ்த்து ரூ.6 கோடி வரி வசூலிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது ரூ.4 கோடி அளவுக்கு வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாவட்ட அளவில் ராமநாதபுரம் நகராட்சி வரிவசூலில் முதலிடம் வகிக்கிறது. நகராட்சியில் தற்போது மக்களே முன்வந்து வரியைச் செலுத்தியிருப்பது வரவேற்புக்குரியது. நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் அவசியத்தை பொதுமக்கள் அறிந்து வரியைச் செலுத்திவருகிறாா்கள்.
வரி வசூலான நிலையிலும் மின்கட்டணம், ஊதியம் ஆகியவற்றுக்கு இந்த வரிவசூல் போதவில்லை என்பதே உண்மை. ஆகவே நகரசபைத் தலைவா் தலைமையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வரிகளை முறையாகச் செலுத்த பொதுமக்கள் முன்வரவேண்டியது அவசியம் என்றாா்.
நடப்பு ஆண்டுக்காக அபராதமின்றி வரிகளை மாா்ச்சுக்குள் செலுத்தலாம் என அரசு அறிவித்த நிலையில், வரும் 2 வாரங்களிலும் வரியை மக்கள் செலுத்தலாம் என நகரசபை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.