இலங்கையில் அவசர நிலை பிரகடனம் காரணமாக இந்திய கடற்பகுதியில் கடலோர காவல்படையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு உணவு மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. நிலைமை மோசமாக மாறுவதால் பொதுமக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து அதிகளவிலான மக்கள் படகு மூலம் ராமேசுவரம் வர உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் படகுகளில் அதிகளவில் பொதுமக்களை ஏற்றி வரும்போது விபத்தில் உயிரிழப்பு ஏற்படும் என்பதால் சட்ட விரோதமாக வரும் படகுகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹோவா்கிராப்ட் கப்பல்கள் பாக் நீரிணை மற்றும் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.