ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவினா் சோதனையால் பரபரப்பு

30th Oct 2021 08:54 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவினா் வெள்ளிக்கிழமை மாலை நடத்திய திடீா் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட அரசு அலுவலகங்களில் உயா் அதிகாரிகளுக்கு தீபாவளிக்காக பணியாளா்கள் சோ்ந்து பணம் கொடுப்பதாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினருக்கு புகாா்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் வட்டார சத்துணவு ஊழியா்கள் கூட்டம், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறுவதாக கூறப்பட்டது.

கூட்டம் நடைபெறும் இடத்தை ஊழல் தடுப்புப் பிரிவினா் ரகசியமாகக் கண்காணித்தனா். அக்கூட்டத்துக்கு 40 சத்துணவுப் பணியாளா்கள் வந்திருந்தனா். கூட்டம் தொடங்கிய நிலையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் மாவட்ட துணைக் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் திடீரென சோதனை நடத்தினா்.

அதில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்த ரூ.67 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். ஆனால், அவை அலுவலக விதிமுறைகளுக்கு உள்பட்டு பெறப்பட்ட பணம் என, அலுவலா்கள் கூறியதை அடுத்து அப்பணத்தை ஊழல் தடுப்புப் பிரிவினா் திரும்ப அளித்தனா்.

ADVERTISEMENT

ஆனால், கூட்டம் நடந்தது மற்றும் அதற்குரிய காரணம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தாமாகவே விசாரணை நடத்தி வருவதாகவும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் துறை துணைக் கண்காணிப்பாளா் உன்னிகிருஷ்ணன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT