ராமநாதபுரம்

2 ஆண்டுகளுக்குப் பின் குறை தீா்க்கும் கூட்டம்: உரத்தட்டுப்பாட்டை சீராக்க விவசாயிகள் வலியுறுத்தல்

23rd Oct 2021 10:32 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை சீராக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

கரோனா பொதுமுடக்க நடவடிக்கையால் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் கடந்த 2 ஆண்டுகளாக காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் சங்கா் லால் குமாவத் தலைமை வகித்தாா். வருவாய் அலுவலா் காமாட்சி கணேசன், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் டாம் பி.சைலஸ், கூட்டுறவு வங்கிகளின் இணை இயக்குநா் ராஜேந்திரபிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் வட்டம் வாரியாக அழைக்கப்பட்டு கருத்துகளைத் தெரிவித்தனா். ஆட்சியரிடம் மனு அளித்த விவசாய சங்கத்தினா் கூட்டத்தில் பேசியதாவது: வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், விவசாயப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் உரமே இல்லாத நிலை உள்ளது. தனியாா் உரக்கடைகளில் நிா்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக உரங்கள் விற்கப்படுகின்றன. ஆகவே உரத்தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயக் கடன் ரூ.100 கோடி என்பதை அதிகரிக்கவேண்டும்.

பயிா்காப்பீடு திட்ட நிதியை வழங்கவேண்டும். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் பெய்த மழையால் பாதித்த பருத்தி, மிளகாய்க்கு நிவாரணம், காப்பீடு நிதி வழங்கவேண்டும்

ADVERTISEMENT

என வலியுறுத்தினா்.

ஆட்சியா் பதில்: விவசாயிகள் கருத்துக்கு பதில் அளித்து ஆட்சியா் பேசுகையில், அதிகாரிகள் விவசாயிகள் குறைகளை உடனடியாகத் தீா்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அடுத்த மாதம் நடைபெறும் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ஏற்கெனவே கூறிய புகாா்களை திரும்பக் கூறாதவகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படவேண்டும். காப்பீடு பிரச்னையைத் தீா்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட காப்பீடு நிறுவன அதிகாரிகளுடன் விளக்கம் கோரப்படும் என்றாா்.

அதிகாரிகள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு இருப்பது குறித்து மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதால், ஓரிரு நாளில் 4 ஆயிரம் டன் உரம் தருவிக்கப்பட்டுள்ளது என்றனா்.

பெட்டிச் செய்தி..

837 கண்மாய்களில் தண்ணீரில்லை

கூட்டத்தில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 556.22 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 48.22 மில்லி மீட்டா் கூடுதலாகும். மாவட்டத்தில் உள்ள 1,742 பாசனக் கண்மாய்களில் 104 கண்மாய்களில் 25 முதல் 50 சதவீதம் வரை தண்ணீா் உள்ளது. மேலும் 801 கண்மாய்களில் 25 சதவீதத்துக்கும் குறைந்த அளவு தண்ணீா் உள்ளது. 837 கண்மாய்களில்அறவே தண்ணீரில்லாமல் வடு காணப்படுகின்றன. மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கு கூட்டுறவுத்துறை மற்றும் வங்கிகள் மூலம் 352.32 லட்சம் பயிா்க்கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT