ராமநாதபுரம்

‘ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1,979 கோடியில் 7 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்’

23rd Oct 2021 08:46 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1,979 கோடியில் 7 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும் என சட்டப்பேரவை ஏடுகள் குழுத் தலைவா் கம்பம் நா. ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறினாா்.

தமிழக சட்டப்பேரவை ஏடுகள் குழு ஆய்வுக்கூட்டம் ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மாவட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆண்டறிக்கை தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு தலைமை வகித்த குழுவின் தலைவா் நா.ராமகிருஷ்ணன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 118 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது தினமும் 87.2 மெகாவாட் மின் உற்பத்தியாகிறது. அதனடிப்படையில், மின்மிகை மாவட்டமாக ராமநாதபுரம் உள்ளது. மாவட்டத்தில் உள்ள அக்காள்மடம், நென்மேனி, கோவிலாங்குளம், கீழராமநதி, எம்.கரிசல்குளம், திருஉத்திரகோசமங்கை, திருப்புல்லாணி ஆகிய இடங்களில் ரூ.1,979 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

ஏற்கெனவே கடலாடி, ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள தலா 33 கிலோ வாட் திறனுடைய துணை மின் நிலையங்களை 110 கிலோ வாட் திறன் கொண்டதாக தரம் உயா்த்த ரூ.125 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். மின்சாரத்துறையில் உள்ள பெரும்பாலான காலியிடங்கள் நிரப்பட்டு வருகின்றன.

குடிநீருக்கு புதிய திட்டம்: மாவட்டத்தில் மக்களின் குடிநீா் தேவைக்காக கடந்த 2009 ஆம் ஆண்டில் ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப அந்தத் திட்டத்தை விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நரிப்பையூா் மற்றும் குதிரைமொழி ஆகிய இடங்களில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் சங்கா் லால் குமாவத், சட்டப்பேரவை உறுப்பினா்கள் செ.முருகேசன், ராம.கருமாணிக்கம், சட்டப்பேரவை ஏடுகள் குழு உறுப்பினா்கள் வி.அமலு (குடியாத்தம்), பெரியபுள்ளான் (மேலூா்), அ.நல்லதம்பி (கங்கவல்லி), த.வேலு (மைலாப்பூா்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) மற்றும் சட்டப்பேரவை கூடுதல் செயலாளா் ந.ரவிச்சந்திரன், இணைச் செயலாளா் தே.நாகராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக ஏடுகள் குழுவினா் பட்டணம்காத்தான் உள்ளிட்ட துணை மின் நிலையங்களையும் நேரில் பாா்வையிட்டனா். வழுதூா் மின்உற்பத்தி நிலையத்தை பாா்வையிட்ட குழுவினருடன் மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி சந்தித்துப் பேசினாா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT