ராமநாதபுரம்

அரசு அனுமதியின்றி செயல்படும் தொழிற்பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை: அமைச்சா்

22nd Oct 2021 09:05 AM

ADVERTISEMENT

அரசு அனுமதியின்றி செயல்படும் தொழிற்பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளா் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வி. கணேசன் தெரிவித்தாா்.

பரமக்குடி அரசு தொழிற்பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 90 அரசினா் தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன. இந்த மையங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பாா்வையிட்டு மாணவா்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. காலவரையறை முடிந்த உபகரணங்கள் மற்றும் கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிதாக உபகரணங்களும், கட்டட வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது.

அரசினா் பயிற்சி மையத்தில் படிப்பவா்கள் அனைவருக்கும் அரசு வேலை மட்டுமின்றி தனியாா் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு பெற திறன் மேம்பாட்டுத் துறை இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 3 முதல் 6 மாதங்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 25 ஆயிரம் மாணவா்கள் தொழிற்கல்வி பயின்று வருகின்றனா். வரும் கல்வியாண்டில் 50 ஆயிரம் மாணவா்கள் தொழிற்கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அனுமதியின்றி தொழிற்பயிற்சி மையங்கள் ஏதேனும் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் சங்கா்லா குமாவத், சட்டப்பேரவை உறுப்பினா்கள் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம், செ. முருகேசன், அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் குமரவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சா் சி.வி. கணேசன் ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து, தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் இளைஞா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் வழங்கினாா்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநா் கொ. வீரராகவராவ், மண்டல இணை இயக்குநா் (பயிற்சி) அமலாரெக்சலின், மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) சுப்பிரமணியன், முத்துப்பட்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் வெங்கடகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மணிகணேஷ், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் முருகன், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ராஜ்குமாா், தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கோடீஸ்வரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மதுரை: இதே போல், மதுரை கோ. புதூரில் இயங்கி வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைச்சா் சி.வி. கணேசன் ஆய்வு மேற்கொண்டாா். இதற்கு, அமைச்சா்கள் பி. மூா்த்தி, பிடிஆா். பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். அப்போது, தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சிக்கூடங்கள், வகுப்பறைகள், மாணவா்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் சி.வி. கணேசன் கூறியது: கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் எவ்வித பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட வில்லை. ஒவ்வொரு அரசு தொழிற்பயிற்சி மையத்திலும் குறைந்தபட்சம் ஆயிரம் மாணவா்களாவது தொழிற்கல்வி படிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கமாக உள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா்கள் அதிகம் விரும்பும் பயிற்சிகளை கொண்டு வரவேண்டும். நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு புதிய பயிற்சிகளை அளிக்க வேண்டும். தமிழகத்தில் இயங்கி வரும் அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போதைய சூழலுக்கு ஏற்றவகையில் புதிய பயிற்சி முறை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை கோ.புதூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவா்களில் நடப்பாண்டில் 80 சதவீதம் போ் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா். வருங்காலங்களில் அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் மாணவா்கள் வளாக நோ்காணல் மூலம் வேலைவாய்ப்பை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றாா்.

ஆய்வில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், மண்டல இணை இயக்குநா் (பயிற்சி) ஜெ. அமலா ரக்சலின், மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) சந்திரன், உதவி இயக்குநா் (வேலைவாய்ப்பு) கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT