திருவாடானை ஊராட்சி ஒன்றியம் பழங்குளம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தலைவா் பதவிக்கான இடைத்தோ்தலில் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா்.
பழங்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த கருப்பையா கடந்த ஆறு மாதங்களுக்கு முன் உடல் நிலை சரிஇல்லாமல் உயிரிழந்தாா். இதனால் தலைவா் பதவி காலி என அறிவிக்கப்பட்ட நிலையில் அப்பதவிக்கு சனிக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் மொத்த வாக்களாா்கள் 1557 போ். பழங்குளம், ஊரணிக்கோட்டை, மாணிக்கம்கோட்டை ஆகிய மூன்று வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7மணி முதல் நடைபெற்றது.
இதில் அதே ஊரைச் சோ்ந்த கரு.பாா்த்தீபன் மற்றும் துரைராஜ் ஆகிய இருவா் போட்டியிடுகின்றனா். வாக்காளா்கள் ஆா்வத்துடன் வந்து வாக்குப் பதிவு செய்தனா். திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமோகன் ஆகியோா் தலைமையில் ஊராட்சி ஒன்றிய பணியாளா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டனா்.
கரோனா விதிமுறைகளின் படி சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்குப் பதிவு நடைபெற்றது. திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளா் சின்னையா தலைமையில் காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். பிற்பகல் 3 மணி வரை 57 சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது.