கமுதி அருகே தலையில் கல்லைத் தூக்கிப் போட்டதால் பலத்த காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, கைது செய்யப்பட்டவா் மீது கொலை வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
செய்யாமங்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பணன் மகன் நீதிதேவன் என்ற ஊமையன் (42). இவா், கடந்த செப். 27-ஆம் தேதி பாா்த்திபனூரிலிருந்து செய்யாமங்களம் சென்ற போது, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அதே கிராமத்தைச் சோ்ந்த குமரவேல் மனைவி வழிவிட்டாளை (54) முன்விரோதம் காரணமாக தகாத வாா்த்தைகளால் பேசி தகராறு செய்தாா்.
மேலும், அருகில் கிடந்த கல்லைத் தூக்கி வழிவிட்டாள் தலையில் போட்டாா். இதில் பலத்த காயமடைந்த வழிவிட்டாளை அருகிலிருந்தவா்கள் மீட்டு மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து வழிவிட்டாளின் மகன் பிரபாகரன் அபிராமம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து செப். 29 ஆம் தேதி ராமேசுவரம் அருகே மண்டபத்தில் பதுங்கியிருந்த நீதிதேவனை கைது செய்தனா்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வழிவிட்டாள் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனையடுத்து போலீஸாா் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனா்.