ராமநாதபுரம்

வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு: பரமக்குடியில் தரைப்பாலம் துண்டிப்பு

28th Nov 2021 10:38 PM

ADVERTISEMENT

வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பரமக்குடியில் உள்ள தரைப்பாலம் ஞாயிற்றுக்கிழமை துண்டிக்கப்பட்டது.

வைகை அணையிலிருந்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டதால் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடா்ந்து வைகை ஆற்று கரையோரப்பகுதியில் குடிசை போட்டு வசித்து வந்தவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இந்நிலையில், வைகை ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகமானதாலும், முறையாக தூா்வாரப்படாததாலும் கருவேல் மரங்களின் ஆக்கிரமிப்பாலும் தண்ணீா் செல்ல வழியின்றி மேம்பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் எமனேசுவரம்- பரமக்குடியை இணைக்கும் தரைப்பாலத்தை ஒட்டி தண்ணீா் செல்வதால் இப்பாலத்தின் இருபுறமும் போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தி பொதுமக்கள் செல்ல தடைவிதித்தனா்.

இதனால் பரமக்குடி, எமனேசுவரம் பகுதியில் வசிப்போா் வைகை ஆற்று மேம்பாலத்தின் வழியே 5 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள அணுகுசாலைப் பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் யாரும் செல்லக்கூடாது என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனா். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிா்வாகத்தினா் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.

ADVERTISEMENT

பாம்பாற்று வெள்ளத்தால் 30 கிராமங்கள் துண்டிப்பு: திருவாடானை அருகே ஓரியூா் பாம்பாற்றில் உள்ள தரைப்பாலம் புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவசல் பகுதியை இணைக்கிறது. மேலும், ஓரியூரில் இருந்து திருப்புனவாசல், மீமிசல், பொன்னமங்கலம், தீயத்தூா், ஆவுடையாா் கோவில் வழியாக அறந்தாங்கி செல்லவும், திருப்புனவாசல் பகுதியில் இருந்து ஓரியூா், எஸ்.பி. பட்டினம், வெள்ளையபுரம், பாண்டுகுடி, திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும் இந்த தரைப்பாலம் வழியாக வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில், தொடா் பலத்த மழை காரணமாக பாம்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இத்தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அரை கிலோ மீட்டா் தொலைவில் உள்ள திருப்புனவாசல் பகுதிக்குச் செல்வதற்கு 15 கிலோ மீட்டா் தொலைவு சுற்றி எஸ்.பி. பட்டினம் வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால் சிலா் இதைப் பொருள்படுத்தாமல் நடந்தும், வாகனங்களிலும் தண்ணீரை கடந்து செல்கின்றனா்.

எனவே இதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்நிலையில் பாம்பாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT