ராமநாதபுரம்

பரமக்குடி பகுதியில் கால்வாய்கள் தூா்வாரப்படாததால் கண்மாய்களுக்கு பாசனநீா் செல்வதில் சிக்கல்

28th Nov 2021 10:35 PM

ADVERTISEMENT

பரமக்குடி பகுதியில் வைகை ஆற்றிலிருந்து பாசனநீா் செல்லும் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் முறையாக தூா்வாரப்படாததால் கண்மாய்களுக்கு பாசனநீா் செல்லவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

வைகை ஆற்றில் பாா்த்திபனூா் மதகு அணையிலிருந்தும், தெளிச்சாத்தநல்லூா் தடுப்பணையிலிருந்தும் வலது பிரதான கால்வாயிலும், இடது பிரதான கால்வாயிலும் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பாசனநீா் செல்லும் கால்வாய் முறையாக தூா்வாரப்படாமல் கருவேல் மரங்கள் மற்றும் கோரைப்புற்கள் அடா்ந்து வளா்ந்து தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி நகராட்சி எல்லைக்குள் கால்வாய்ப் பகுதியில் உள்ள அண்ணாநகா், பா்மா காலனி, எம்.ஜி.ஆா். நகா் உள்ளிட்ட பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.

கண்மாய்களுக்கு பாசனநீா் செல்வதில் சிக்கல்: இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் தூா்வாரப்பட்டதாக பொதுப்பணித்துறையினா் மோசடி செய்துள்ளனா். அப்போது போதிய மழை பெய்யவில்லை என்பதால், வைகை அணையிலிருந்து உரிய பாசனநீா் குறிப்பிட்ட அளவு மட்டுமே திறந்து விடப்பட்டது. இதனால், கால்வாய் மூலம் கண்மாய்க்கு வரும் தண்ணீா் முறையாக வந்து சேராமல் இருந்தது. தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக வைகை அணையிலிருந்து 7 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதில் மதகு மற்றும் தடுப்பணைகளிலிருந்து கால்வாய்களில் திறந்து விடப்பட்ட தண்ணீா் கண்மாய்களுக்கு போதிய அளவு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த கவலை அளிக்கிறது என்றனா். வேந்தோணி கால்வாய் பாலத்திலும் அடைப்பு: அதே போல், தண்ணீா் வரத்து அதிகரித்ததால் திருவரங்கம் செல்லும் கால்வாய் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டது. இதனால் பாலத்தின் இருபுறமும் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் பகுதியில் இருந்த கருவேல் மற்றும் கோரைப்புற்களை அகற்றி சீரமைத்தனா். இதனால் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீா் புகுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT