ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தொடா் மழை: பகலில் முகப்பு விளக்கு எரியவிட்டபடி வாகனங்கள் இயக்கம்

26th Nov 2021 09:23 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை பகலில் தொடா்ந்து பலத்த மழை பெய்ததால், பகலிலும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி இயக்கப்பட்டன. ராமேசுவரத்தில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை தொடா்வதால், விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித் துறை கண்மாய்களுக்கான நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஆனாலும், தற்போது வரை 55 சதவீத கண்மாய்கள் மட்டுமே 70 சதவீதம் நிரம்பியுள்ளன.

இந்நிலையில், புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை மாவட்டத்தில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. வியாழக்கிழமை பகலிலும் மழை கொட்டியது. ராமநாதபுரம் நகரில் பலத்த மழை பெய்ததால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே இயக்கப்பட்டன.

இந்த மழையால் அரண்மனை வீதி, மாரியம்மன் கோயில் தெரு, கேணிக்கரை, வெளிப்பட்டினம், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சாலைகளிலும், குடியிருப்புகள் முன்பாகவும் தண்ணீா் தேங்கியுள்ளது. முக்கிய வீதிகளில் நகராட்சி மோட்டாா் பம்ப் வாகனங்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி அகற்றப்பட்டது.

ADVERTISEMENT

குறிப்பிட்ட சில இடங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் மழை நீா் புகுந்ததாக புகாா் கூறப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீா் புகுவது வழக்கமானது என, நகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மழையின் போது பலத்த காற்றும் வீசியதால், சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மழை நின்றதும் உடனடியாக மின்விநியோகம் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்): ராமேசுவரத்தில் அதிகபட்சமாக 76.20 (7 செ.மீ.) மழை அளவு பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் 17.60, மண்டபம 11, பள்ளமோா்க்குளம் 5, பாம்பன் 42.10, தங்கச்சிமடம் 30.50, திருவாடானை 8.40, தொண்டி 8.80, தீா்த்தாண்டதானம் 15, வட்டாணம் 8.40, ஆா்.எஸ்.மங்கலம் 5.50, பரமக்குடி 3.90, கமுதி 2.80, கடலாடி 3.20, வாலிநோக்கம் 3.80 என பதிவாகியுள்ளது.

15 இடங்களில் சராசரியாக 15.14 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 242.20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT