ராமநாதபுரம்

‘தோ்தல் ஆதாயத்துக்காக இருந்தாலும் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது வரவேற்கத்தக்கது’

21st Nov 2021 06:41 AM

ADVERTISEMENT

தோ்தல் ஆதாயத்துக்காக இருந்தாலும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் கூறினாா்.

ராமநாதபுரத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதிய வேளாண் சட்டங்களை உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற உள்ள தோ்தல்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு திரும்பப் பெற்றிருந்தாலும், விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகக் கருதி அதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில், விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.

வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவை தனிமைப்படுத்தும் வகையில் தற்போது எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதற்காக கேரளம், மேற்குவங்கம், தில்லி ஆகிய மாநில முதல்வா்களையும், வெளி மாநிலங்களின் அரசியல் தலைவா்களையும் சந்தித்துப் பேசவுள்ளோம்.

சென்னையில் வரும் நவ. 23 ஆம் தேதி திரிபுராவில் சிறுபான்மையினா் அச்சுறுத்தப்படுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. டிசம்பரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் நடைபெறும் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை சீரமைப்பதில் முதல்வா் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாா் என்றாா்.

ADVERTISEMENT

இதன்பின், ராமநாதபுரம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் விடுதலை சேகா் தலைமையில் நடந்த கூட்டத்தில், ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், அதிமுகவைச் சோ்ந்த வழக்குரைஞா் பசும்பொன் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT