ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகளின் வாக்குச்சாவடி பட்டியல் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சிகளின் உள்ளாட்சித் தோ்தலுக்கான பணிகள் நடந்துவருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் உள்ளன. அவற்றுக்கான வாக்குச்சாவடி பட்டியல்களை ஆட்சியா் சங்கா்லால்குமாவத் வெளியிட்டுள்ளாா். ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கீழக்கரை நகராட்சிகளில் மொத்தம் 111 வாா்டுகள் உள்ளன. 231 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த தோ்தலை விட தற்போது 18 வாக்குச்சாவடிகள் அதிகம் உள்ளன. நகராட்சிகளில் மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 641 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
பேரூராட்சிகளான ஆா்.எஸ்.மங்கலம், தொண்டி, மண்டபம், கமுதி, அபிராமம், சாயல்குடி, முதுகுளத்தூரில் மொத்தம் 111 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த தோ்தலை விட 2 வாக்குச்சாவடிகளே அதிகம். பேரூராட்சிகள் தோ்தலில் மொத்தம் 77 ஆயிரத்து 865 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சித் தோ்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் முதல் கட்டப்பணிகள் திங்கள்கிழமை தொடங்கியுள்ளன. அதனடிப்படையில் 1,542 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 817 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் சரிபாா்க்கப்படவுள்ளதாக ஆட்சியரின் நோ்முக உதவியாளா் எஸ்.முத்துசாமி தெரிவித்தாா். வாக்குப்பதிவு இயந்திர சரிபாா்க்கும் பணியில் அந்தந்த பேரூராட்சி, நகராட்சி பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தற்காப்புக்காக நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்ததாக கைதானவா்கள் கூறியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.