கமுதி அருகே செவ்வாய்க்கிழமை இரைதேடி ஊருக்குள் வந்த புள்ளி மான், நாய்கள் கடித்துக் குதறியதில் பலியானது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள மண்டலமாணிக்கம் குண்டாறு பகுதியில் ஏராளமான மான்கள் சுற்றித் திரிகின்றன. செவ்வாய்க்கிழமை காலை இரைதேடி மண்டலமாணிக்கம் கிராமத்திற்குள் வந்த புள்ளிமானை நாய்கள் துரத்திக் கடித்துள்ளன. இதைக் கண்ட பொதுமக்கள் மானை மீட்டு மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா் சாயல்குடி சரக வனப் பாதுகாவலா் முருகனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. கமுதி கோட்டை மேட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மானுக்கு சிகிச்சை அளித்தனா். இருப்பினும் மான் பலியானதால், உடற்கூறாய்வு செய்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு புதைக்கப்பட்டது.