கமுதி: ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு அரசியல் லாபத்திற்காக அதிமுக அரசால் அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனை முக்குலத்தோா் முன்னேற்ற சங்கம் மற்றும் முக்குலத்தோா் புலிப்படை வரவேற்றுள்ளது.
இதுகுறித்து முக்குலத்தோா் புலிப்படைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சேது. கருணாஸ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: பிற்படுத்தப்பட்டோா் பிரிவில், அதாவது 68 சீா்மரபினா் சமுதாயத் தொகுப்பில் வன்னியா்களும் உள்ளனா். மொத்த இட ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிற நிலையில், இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியா்களுக்கு மேலும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் (பிப்ரவரி 28) அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தாா்.
இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி முக்குலத்தோா் புலிப்படை கட்சி சாா்பிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவு சமுதாயத்தைச் சாா்ந்தவா்கள் சாா்பிலும் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், முறையாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு சாதிக்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம். 68 சமூகங்களைக் கொண்ட சீா்மரபினருக்கு 7.5 சதவீதமும், மீதமுள்ள 40 சமூகத்தினருக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற சாதியைச் சோ்ந்த மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.