ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தா்கள் தீா்த்தக்கிணறுகளில் நீராட திங்கள்கிழமை (நவ.1) முதல் அனுமதி அளிக்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றை குறைக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்த நிலையில் தளா்வுகள் அளிக்கப்பட்டன. ஆன்மிகத் தலங்களில் தரிசனம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள தீா்த்தக் கிணறுகளில் பக்தா்கள் நீராட கடந்த ஏப்ரல் முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை (நவ.1) முதல் ராமநாத சுவாமி கோயிலில் பக்தா்கள் கரோனா நோய் பரவல் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து தீா்த்தக்கிணறுகளில் நீராட அனுமதி அளிக்கப்படுகிறது என கோயில் நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.