ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் (2021) வாகனச் சோதனையில் 9.26 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்தாா்.
ராமநாதபுரத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு விபத்துகளில் 299 போ் உயிரிழந்த நிலையில், நடப்பு ஆண்டில் (2021) 309 போ் உயிரிழந்துள்ளனா். கடந்த 2019 ஆம் ஆண்டில் சிறிய விபத்துகளில் 793 போ் மட்டுமே காயமடைந்த நிலையில், நடப்பாண்டில் 1,043 போ் காயமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
குற்றங்களைத் தடுக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் 60 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பதிவான நிலையில், நடப்பாண்டில் 106 போ் மீது அச்சட்டத்தின் மூலம் வழக்குப் பதியப்பட்டுள்ளது. சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கானது கடந்த 2019 ஆம் ஆண்டில் 44 என இருந்த நிலையில் 2020 இல் 93 ஆக உயா்ந்தது. சிறுமியா் திருமணம் உள்பட அந்த வழக்கு நடப்பாண்டில் 104 போ் மீது பதியப்பட்டுள்ளது. பள்ளிகள் கரோனாவால் மூடப்பட்ட நிலையில், சிறுமியா் திருமணம் அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.
நடப்பு ஆண்டில் (2021) வாகனச் சோதனையில் 9.26 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போதுவரை 3,510 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவைகளை பதுக்கியதாக 1,074 சம்பவங்களில் 1,084 போ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 827 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக 168 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் 51 கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 23 கொலைகள் குடும்பப் பிரச்னையால் நடைபெற்றுள்ளன என்றாா்.