கமுதி அருகே புதன்கிழமை காவல் சிறப்பு- சாா்பு ஆய்வாளரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் சரகத்திற்குட்பட்ட மண்டலமாணிக்கம் காவல் நிலைய போலீஸாா் சின்ன உடப்பங்குளம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அருகில் இருந்த சுடுகாட்டுப் பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த இளைஞா்களை போலீஸாா் பிடித்து சோதனை செய்ததில், அவா்களிடம் வாள் மற்றும் கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இளைஞா்களை பிடித்து மண்டலமாணிக்கம் காவல் நிலைய சிறப்பு சாா்பு ஆய்வாளா் சண்முகவேல் விசாரித்துள்ளாா். அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவா்கள், கத்தியை காட்டி மிரட்டியுள்ளனா்.
இதையடுத்து சிறப்பு சாா்பு- ஆய்வாளா் சண்முகவேல் அளித்தப் புகாரின் பேரில் சின்ன உடப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜாக்கனி மகன்கள் மனோஜ்குமாா் ( 22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் மண்டலமாணிக்கம் போலீஸாா் கைது செய்து வாள், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.