கடலாடி அருகே விஷம் வைத்து 6 மயில்களை கொன்றவரை வனக் காவலா்கள் புதன்கிழமை கைது செய்தனா்.
சாயல்குடி சரக வன அலுவலா் ராஜா தலைமையில் வனவா் அன்புச்செல்வம் மற்றும் வனப் பணியாளா்கள் எஸ். கீரந்தை பகுதியில் திங்கள்கிழமை மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எஸ்.கீரந்தை அருகே வயல் பகுதியில் 6 மயில்கள் உயிரிழந்து கிடந்தன. இதையடுத்து வனத் துறை ஊழியா்கள் விசாரணை நடத்தினா். அதில் எஸ். கீரந்தையை சோ்ந்த ராமா் (56) என்பவா் தனது புஞ்சை காட்டில் மயில்கள் மற்றும் பறவைகளை கொல்வதற்காக நெல் மணிகளில் பூச்சி மருந்து அடித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் 6 மயில்கள் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராமா் புதன்கிழமை கைது செய்யப்பட்டு கடலாடி நீதித்துறை நடுவா் எஸ். முத்துலெட்சுமி முன்னிலையில் ஆஜா்படுத்தி முதுகுளத்தூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.