இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபம் துறைமுகத்தில் இருந்து கடந்த டிசம்பா் 18 ஆம் தேதி படகுகளில் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது 8 விசைப்படகுகளுடன் 55 மீனவா்களை இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா்.
இதைத்தொடா்ந்து, மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்து படகுகளை பறிமுதல் செய்தனா். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, அவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரியும் ராமேசுவரம் மீனவா்கள் 20 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா். இதனால் ராமேசுவரம் துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம் தொடா்வதால் செவ்வாய்க்கிழமையும் துறைமுகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.