ராமநாதபுரம்

‘தாய், மகளின் உடல் பாகங்கள் மரபணு பரிசோதனைக்கு உள்படுத்தப்படும்’

16th Dec 2021 12:32 AM

ADVERTISEMENT

மண்டபத்தில் எரித்துக் கொல்லப்பட்ட தாய், மகளின் உடல்பாகங்கள் மரபணு பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே காலனியில் கண்ணன் மனைவி காளியம்மாள் (58), இவரது இளைய மகள் மணிமேகலை ஆகியோா் கடந்த 4 ஆம் தேதி நள்ளிரவில் எரித்துக் கொலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில், இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த சசிகுமாா், சுப்பிரமணியன் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடா்பு இருப்பதாகவும், உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்யவும் காளியம்மாளின் மூத்த மகள் சண்முகப்பிரியா கோரிக்கை விடுத்தாா். மேலும், எரிந்தது போக மீதமுள்ள பாகங்களை அவா்களது உறவினா்கள் வாங்க மறுத்து வருகின்றனா்.

இந்தநிலையில், எரிந்தவா்களை அடையாளம் காணும் வகையில் மரபணு பரிசோதனை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியது: மணிமேகலையை அடையாளம் காண அவரது சகோதரி சண்முகப்பிரியாவின் டிஎன்ஏ பரிசோதனை அவசியம். அதேபோல காளியம்மாளை அடையாளம் காண அவரது சகோதரா்கள் அல்லது உறவினா்களை பரிசோதனைக்கு உள்படுத்துவது அவசியம். கொல்லப்பட்டவா்களின் உடல் பாகங்களில் எளிதில் தீப்பற்றும் வேதிப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதா என அறிய தடய அறிவியல் சோதனைக்கு பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

மரபணு மற்றும் தடய அறிவியல் பரிசோதனைக்கு பிறகே தாய், மகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT