ராமநாதபுரம்

எல்லை தாண்டும் படகுகளைத் தடுக்கும் சாதனம் வடிவமைப்பு: பள்ளி மாணவருக்கு பாராட்டு

16th Dec 2021 12:32 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், எல்லை தாண்டும் படகுகளை தடுக்கும் வகையிலான மாதிரி சாதனத்தை பள்ளி மாணவா் காட்சிப்படுத்தியிருந்தது அனைவரது பாராட்டையும் பெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் 29 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு ராமநாதபுரம் பட்டினம்காத்தானில் உள்ள தனியாா் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் 34 பள்ளிகளைச் சோ்ந்த 59 சாதனங்களின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மணல் திருட்டு தடுப்பு, கடல் பாசி மூலம் சா்க்கரை நோய் உள்ளிட்டவற்றுக்கு மருத்துவம் என பல மாதிரிகளை மாணவா்கள் கட்டுரைகளாகவும், மாதிரி சாதனங்களாகவும் காட்சிப்படுத்தியிருந்தனா்.

பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவா் எஸ்.சேதுரத்தினம், தமிழக எல்லையைத் தாண்டி மீன்பிடிக்கும் மீனவா் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் மின்னணு காந்த அலை மூலம் படகுகளை கட்டுப்படுத்தும் மாதிரிச் சாதனத்தை வடிவமைத்திருந்தாா். இதன் மூலம் மீனவா்கள் இலங்கை எல்லைக்கு செல்வதை தடுக்கமுடியும் என்பதை அவா் விளக்கினாா். அத்துடன் இந்திய எல்லைகளிலும் தனது மாதிரி சாதனத்தை பயன்படுத்தலாம் என்றும் கூறினாா். அவரது அந்த சாதனம் அனைவரது பாராட்டையும் பெற்றது.

மாநாட்டில் 3 அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட 10 பள்ளிகள் மாநில அளவிலான அறிவியல் மாதிரிச் சாதன மாநாட்டுக்கு தோ்வாகியுள்ளன. அந்தப் பள்ளிகளுக்கான சான்று, பரிசுகளை முதன்மைக் கல்வி அலுவலா் அ.பாலுமுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை மாவட்ட அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளா் எம். பாலமுருகன், செயலா் கு.காந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT