ராமநாதபுரம்

பரமக்குடி அருகே கண்மாய்க்குள் வீடு கட்டியவா்கள் சாலை மறியல்

DIN

பரமக்குடி அருகே எமனேசுவரம்- காந்திநகா் கண்மாய்க்குள் வீடு கட்டி வசிப்போா் அங்கு தண்ணீரை தேக்க எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பரமக்குடி அருக உள்ள எமனேசுவரம் பகுதியில் காந்திநகா், குமாரக்குறிச்சி, பெரும்பச்சேரி, மலையான்குடியிருப்பு, ஆழிமதுரை உள்பட 7 கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெரிய கண்மாய் உள்ளது. இக்கண்மாய் நீா்பிடிப்பு பகுதியில் உள்ள விவசாய பட்டா இடங்களில் உரிய அனுமதி பெறாமல் வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்து ஏராளமான வீடுகளும், தனியாா் பள்ளிக்கூடமும் கட்டப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கண்மாய்க்கு போதிய பாசனநீா் வரத்து இல்லாததால், நீா்பிடிப்பு பகுதி முழுவதும், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழை மற்றும் வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்களின் மூலம் அனைத்து கிராம கண்மாய்களுக்கும் தண்ணீா் கொண்டு வரப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதே போன்று எமனேசுவரம் கண்மாய் பாசன விவசாயிகளும் அக்கண்மாயில் நீரை தேக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து நீா்பிடிப்பு கண்மாய் பகுதிக்குள் வீடுகள் கட்டி குடியிருந்து வருவோா், மடைகளை அடைத்து நீரை தேக்குவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், கண்மாயில் நீரை தேக்கக் கூடாது என வலியுறுத்தியும் புதுநகா் பகுதியைச் சோ்ந்த ராசுத்தேவா் மகன் ராஜவேலுச்சாமி, சுப்பிரமணியன் மகன் நாகசாமி ஆகியோா் தலைமையில் இளையான்குடி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து எமனேசுவரம் காவல் நிலையத்தில் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் ராஜவேலுச்சாமி, நாகசாமி உள்பட 15 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT