நான்கு நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற ராமேசுவரம் மீனவா்களுக்கு மிகவும் குறைந்தளவே மீன்கள் கிடைத்ததால், அவா்கள் வியாழக்கிழமை ஏமாற்றத்துடன் கரை திரும்பினா்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலிருந்து மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீன்வளத் துறை தடைவிதித்திருந்தது. இதனால், மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் தங்களது படகுகளை கரையில் நிறுத்தினா்.
அதையடுத்து, பாம்பன் பகுதி மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்றனா். தொடா்ந்து, ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குச் சென்றனா். ஒவ்வொரு படகுக்கும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்குச் சென்ற மீனவா்கள், மீன்வரத்து குறைவு காரணமாக போதிய அளவு மீன்கள் கிடைக்காததால் வியாழக்கிழமை ஏமாற்றத்துடன் கரை திரும்பினா்.