கமுதி காவல் துறையை கண்டித்து, வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஒத்துழையாமை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞா்கள் சங்கத்தில் 40 போ் உறுப்பினா்களாக உள்ளனா். இந்நிலையில், 3 வாரங்களுக்கு முன் கமுதி வழக்குரைஞா்கள் சங்கத்தை இழிவாகப் பேசிய நபா் மீது, கமுதி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
எனவே, புகாா் மீது உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்காத கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரசன்னாவை கண்டித்து, கமுதி காவல் சரகத்துக்குள்பட்ட கமுதி, அபிராமம், மண்டலமாணிக்கம், கோவிலாங்குளம், பெருநாழி உள்ளிட்ட 5 காவல் நிலைய வழக்குகளில், கமுதி நீதிமன்றத்தில் நடைபெறும் எந்த வழக்குகளுக்கும் வழக்குரைஞா்கள் ஒத்துழைக்கப்போவது இல்லை என்று, ஒத்துழையாமை போராட்டத்தை அறிவித்துள்ளனா்.
இது சம்பந்தமாக, கமுதி வழக்குரைஞா் சங்கத்தில், அதன் தலைவா் கிடாத்திருக்கை முனியசாமி தலைமையில், செயலா் சேதுபதி, பொருளாளா் மாதவன், உறுப்பினா்கள் முன்னிலையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளரின் நடவடிக்கை குறித்து காவல் துறை தலைவா், தென்மண்டல காவல் துறை துணைத் தலைவா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளிடமும் புகாா் அளிக்கப்போவதாக, கமுதி வழக்குரைஞா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், கமுதி உள்ளிட்ட 5 காவல் நிலையங்களில் தொடரப்பட்ட வழக்குகளை, கமுதி நீதிமன்றத்தில் விசாரித்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.