ராமநாதபுரம் மாவட்டத்தில் 811 அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ.15.37 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை, ஆட்சியா் சங்கா்லால் குமாவத் வியாழக்கிழமை வழங்கினாா்.
தமிழக அரசு, தொழிலாளா் நலத்துறையில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு 17 நல வாரியங்களை செயல்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியங்களில் பதிவு பெற்ற 811 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.11.13 லட்சம், இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.2.42 லட்சம், ஓய்வூதியத் தொகை ரூ.1.82 லட்சம் என மொத்தம் ரூ.15.37 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியில், 5 அமைப்புசாரா தொழிலாளா் பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவுகளையும் ஆட்சியா் வழங்கினாா். இதில், மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் க. மலா்விழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.