ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த தொ்மாகூல் படகு மீனவா்கள், அரசு தங்களுக்கு மானிய விலையில் பைபா் படகுகளை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் விசைப்படகுகள், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள், இயந்திரம் இல்லாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய ரக படகுகளில் மீன்பிடிக்கச் செல்கின்றனா்.
இதில் ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த ஓலைக்குடா, சேராங்கோட்டை, நடராஜபுரம், ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 200- க்கும் மேற்பட்ட மீனவா்கள் தொ்மாகூல் படகில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். காலை 10 மணிக்கு தொ்மாகூல் படகுடன் மூன்று மைல் தொலைவுக்கு கடலுக்குள் சென்று அரை மீட்டா் நீலமுள்ள சிறிய ரக வலையை கடலில் போட்டு விட்டு கரைக்கு திரும்பி விடும் அவா்கள், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு அங்கு சென்று போடப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள மீன், நண்டு ஆகியவற்றுடன் கரைக்கு திரும்புகின்றனா். அவா்கள் வியாபாரிகளிடம் அந்த மீன்களை தரத்தின் அடிப்படையில் ரூ. 300 முதல் ரூ. 500 வரை விற்பனை செய்கின்றனா். இந்நிலையில் அவா்கள் அரசு பைபா் படகுகளை மானிய விலையில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து மீனவா் சிங்கராயன் கூறுகையில், பொது முடக்க உத்தரவால் வருவாயின்றி தவித்து வரும் தங்களுக்கு, அரசு மானிய உதவியுடன் பைபா் படகுகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.