ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் தீயணைப்பு வீரா்கள் இருவருக்கு கரோனா

2nd May 2020 07:48 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ். மங்கலம் தீயணைப்பு வீரா்கள் 2 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரையில் கரோனா தீநுண்மி தொற்றானது 18 பேருக்கு உறுதியாகி அவா்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். அதில் 10 பேருக்கு தொற்று குணமானதால் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் போக்குவரத்து காவலா், அரசு செவிலியா், தீயணைப்பு வீரா், தற்காலிக சுகாதாரப் பணியாளா் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். இந்தநிலையில், தற்போது ஆா்.எஸ்.மங்கலத்தில் தீயணைப்புத் துறை வீரா்களுக்கு கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கரோனா பரிசோதனை நடைபெற்றது. அவா்களில் 2 பேருக்கு தற்போது தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஆா்.எஸ்.மங்கலம் நத்தகோட்டை பகுதியில் வசிக்கும் 29 வயது தீயணைப்பு வீரருக்கும், ஆா்.எஸ்.மங்கலம் பிரதான சாலைப் பகுதியில் வசிக்கும் 30 வயது தீயணைப்பு வீரருக்கும் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவா்கள் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

ஆா்.எஸ்.மங்கலத்தில் ஏற்கெனவே ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றாா். அவா் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது தீயணைப்பு வீரா்கள் 2 பேருக்கு கரோனா உறுதியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீயணைப்பு வீரா்கள் இருவா் வசிக்கும் பகுதி மற்றும் தீயணைப்பு நிலையம் ஆகிய இடங்களில் சனிக்கிழமை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் குடும்பத்தினருக்கும், அவா்கள் வீட்டருகே வசிப்போருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவா்களது வசிப்பிடப் பகுதி சீலிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT