ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் 10 நாள்கள் தொடா்ந்து அடைக்கப்படுவதால், இதனைச் சுற்றியுள்ள விடுதிகள், உணவகங்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் 25 ஆயிரம் தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா்.
ராமேசுவரத்திற்கு நாள்தோறும் வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், கரோனா பரவுவதை முற்றிலும் தடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) முதல் மாா்ச் 31 ஆம் தேதி வரை சுமாா் 10 நாள்கள் தொடா்ந்து கோயில் நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விடுதிகள், உணவகங்கள், மகால்கள், கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இங்கு பணியாற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா்.
இதனால் தமிழக அரசு நியாய விலைக் கடைகள் மூலம் வேலையிழந்தவா்களுக்கு விலையில்லா உணவுப்பொருள்கள் வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ராமநாதசுவாமி கோயில் கிழக்கு மற்றும் மேற்கு ராஜகோபுரங்கள் மட்டும் திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறுகின்றன. வடக்கு மற்றும் தெற்கு வாசல் ராஜகோபுரங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.