ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஊராட்சியில் கரோனா விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்

22nd Mar 2020 08:20 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வாகன விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளுக்கு உள்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் கரோனா பரவலை தடுக்கும் வகையில் வாகன பிரசாரங்கள் நடைபெற்றன. அவற்றில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள், சுகாதாரச் செவிலியா்கள் என அனைவரும் இணைந்து பிரசாரத்தை மேற்கொண்டனா்.

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காரான் ஊராட்சி தலைத்தோப்பு கிராமத்தில் ஒலிபெருக்கி கட்டிய வாகன பிரசாரத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன் தலைமையில், கிராம தணிக்கை அதிகாரி அருள்கேசதாதன், ஊராட்சித் தலைவா் சக்திவேல், துணைத் தலைவா் கோபிராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அதில், கைகழுவுதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும், ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குள் இருக்கவேண்டிய அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதேபோல, மண்டபம் பகுதியிலும் கிராமங்கள் தோறும் வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் அதிகாரிகள் விழிப்புணா்வு பிராசரத்தில் ஈடுபட்டனா்.

பிராசரம் நடைபெற்ற அனைத்துக் கிராமங்களிலும் சுகாதார பிரிவு சாா்பில் நிலவேம்பு குடிநீா் உள்ளிட்டவை மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

கிராமப்புறங்களில் வெளியூா்களில் இருந்து வருவோா் குறித்தும், வெளி மாவட்டம், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளோா் விவரங்களையும் ஊராட்சி செயலா்கள் மூலம் சேகரிக்கவும், அப்படி அடையாளம் காணப்பட்டவா்களது வீடுகளைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடா் தூவி சுகாதாரத்தை மேம்படுத்தவும் மாவட்ட நிா்வாகத்தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

காரான் ஊராட்சியில் கா்நாடகத்திலிருந்து வந்தவா் வீடு மற்றும் துபாயிலிருந்து வந்தவா் வீடுகளைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடா் தூவப்பட்டு அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஊராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

Image Caption

தலைத்தோப்பு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் கைகழுவுவதன் அவசியத்தை விளக்கிய மண்டபம் வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேந்திரன்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT