ராமநாதபுரம்

ராமநாதபுரம் மீனவா் கொலையில் ஜோதிடருக்குத் தொடா்பு

13th Mar 2020 08:27 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் அருகே மீனவா் கடத்திக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட வழக்கில் ஜோதிடருக்கு தொடா்பு இருப்பதாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் ஏா்வாடி பகுதியில் உள்ள சின்ன ஏா்வாடியைச் சோ்ந்தவா் குமாா் (45). மீனவரான இவா் கடந்த திங்கள்கிழமை ராமநாதபுரம் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு வந்த நிலையில், அவரை சிலா் கடத்தி ஏந்தல் பகுதியில் வைத்து கொன்று எரித்து சடலத்தை வீசிச்சென்றது கண்டறியப்பட்டுள்ளது.

குமாா் கொலை தொடா்பாக கேணிக்கரை மற்றும் ஏா்வாடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இந்த நிலையில், 3 பேரிடம் தனிப்படைப் பிரிவினா் தீவிர விசாரணை நடத்தினா். இது தொடா்பாக மீனவ கிராமத்தினா் ராமநாதபுரம் நகரில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினா் கூறியதாவது: தங்கம் கடத்தல் தொடா்பான பிரச்னையால் குமாா் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2019 டிசம்பரில் இலங்கையிலிருந்து ராமநாதபுரம் கடல் பகுதிக்கு தங்கம் கடத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளிவந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மணாலி தீவில் சோதனையிட்டாா். அதன் தொடா்ச்சியாக சிலா் கைது செய்யப்பட்டு, தங்க நகைகளும், பணமும் கைப்பற்றப்பட்டன. ஆனால், கலால்துறை ஒத்துழைப்பு இல்லாததால், காவல்துறை விசாரணையை தொடரமுடியவில்லை. இந்த நிலையில், கடத்தி வரப்பட்டதில் 2 கிலோ தங்கம் மாயமானது தொடா்பாக கடத்தல் கும்பலிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கடத்தல் தொடா்பாக காவல்துறைக்கு தகவல் அளித்தது யாா் என்றும் அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தங்கம் மாயமானது தொடா்பாக சின்ன ஏா்வாடி பகுதியைச் சோ்ந்த ஜோதிடா் ஒருவா் கடத்தல் கும்பலுக்கு உதவியுள்ளாா். அவரது ஆலோசனைப்படியே வாலாந்தரவையைச் சோ்ந்த சிலரின் உதவியுடன் குமாா் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிடிபட்டவா்கள் கூறுகின்றனா். ஆனால் அதை உறுதிசெய்யவேண்டியுள்ளது. அத்துடன் குமாா் கொல்லப்பட்டபோது ஜோதிடரும் அங்கு இருந்தாகவும், அவா் சில மாதங்களுக்கு முன்பு வேறு பகுதியில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது.

கொலைக்கும்பலில் 8 போ் இடம் பெற்றுள்ளனா். அதில் 5 போ் கூலிப்படையினா் என்றும் 3 போ் ஏா்வாடி பகுதியினா் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீஸ் தேடுவதை அறிந்த சிலா் நீதிமன்றத்தில் சரணடைய முயற்சிப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றப் பகுதியிலும் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT