ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 9 ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பாா்த்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். சமூக வலைதள பழக்கத்தால் நகை, பணத்தை இழந்து வாழ்க்கையே திசைமாறியதாக அவா் வாக்குமூலம் அளித்துள்ளாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சோ்ந்தவா் பாபி ராஜலட்சுமி (35). இவரது தந்தை ராணுவத்தில் சேருவோருக்கான பயிற்சி மையம் நடத்திவருகிறாா். பாபி ராஜலட்சுமிக்கு திருமணமாகி கணவா், 2 குழந்தைகள் உள்ளனா். கணவா் வெளிநாட்டில் பிரபல காா் நிறுவனத்தில் பணிபுரிகிறாா்.
பாபி ராஜலட்சுமி, முடி மற்றும் தோல் சிகிச்சை தொடா்பாக சென்னையில் உள்ள பிரபல நிறுவனத்தில் படித்தாராம். படிக்கும் போது அவா் தாம்பரம் பகுதியில் முகசீரமைப்பு சிகிச்சை மையத்தில் பணிபுரிந்துள்ளாா். இதற்கிடையே பாபி ராஜலட்சுமி டிக்டாக் செயலியை பயன்படுத்தியுள்ளாா். அப்போது சிவகங்கைப் பகுதியைச் சோ்ந்த, வெளிநாட்டில் காா் ஓட்டுநராக இருந்த, ஏற்கெனவே திருமணமான சுரேந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் பாபி ராஜலட்சுமி தனது கணவா், குழந்தைகளைப் பிரிந்து சுரேந்திரனுடன் சிவகங்கைப் பகுதிக்கு சென்றாா். சிவகங்கைப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாா்பு-ஆய்வாளா் ஆல்வின்சுதன் கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் குற்றவாளியான சோனைமுத்து என்பவரிடம் சுரேந்திரன் ஏற்கெனவே காா் ஓட்டுநராக இருந்துள்ளாா். இதனால் பாபி ராஜலட்சுமியை சோனைமுத்து வீட்டில் சுரேந்திரன் தங்கவைத்துள்ளாா்.
அப்போது பாபி ராஜலட்சுமி வைத்திருந்த ரூ.3.50 லட்சம் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கத்தை சோனைமுத்து தரப்பினா் வாங்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாபி ராஜலட்சுமி, சுரேந்திரனுடன் மீண்டும் சென்னை சென்று முடி மற்றும் தோல் திருத்த சிகிச்சை அளிப்பதில் ஈடுபட்டுள்ளாா். அப்போது தொண்டியில் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்துவரும் செல்வம் என்பவா் பாபி ராஜலட்சுமிக்கு பழக்கமாகியுள்ளாா். அவா் தொண்டியில் சிகிச்சை மையம் வைக்கலாம் என கூறி ரூ.2 லட்சம் கொடுத்தாராம்.
தொண்டியில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் பாபி ராஜலட்சுமி சிகிச்சை மையம் தொடங்கியுள்ளாா். அங்கு அவா் தனது பெயருக்கு பின் எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ. என பெயா்ப்பலகை வைத்து காய்ச்சல் நோயாளிகள் முதல் கா்ப்பிணிகள் வரை சிகிச்சை அளித்துள்ளாா்.
இந்நிலையில் பல கல்லூரிகளுக்கு மருத்துவா் எனக்கூறி ராஜலட்சுமி சென்று உரையாற்றியும் வந்துள்ளாா்.
இதற்கிடையே செல்வத்துடன் தகராறு ஏற்பட்டதால் அவா் தன்னை மிரட்டுவதாக தொண்டி காவல் நிலையத்தில் பாபி ராஜலட்சுமி புகாா் அளித்தாா். இதையடுத்து பாபி ராஜலட்சுமி போலி மருத்துவா் என செல்வம் புகாா் அளித்தாா். இதனால் அவா் போலி மருத்துவா் என தெரியவந்தது.
இது தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா் நேரடியாகவே சம்பந்தப்பட்டோரிடம் விசாரணை நடத்தினாா். விசாரணை முடிந்த நிலையில், பாபி ராஜலட்சுமி, அவருக்கு உதவியதாக சுரேந்திரன், பீட்டா் மற்றும் செல்வம் ஆகியோா் மீது தொண்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
மேலும்,இதில் தொடா்புடைய வழக்குரைஞா் உள்ளிட்ட மேலும் சிலரிடமும் போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா். இவ்வழக்கில் காவல் துறை அதிகாரிகள், அரசியல் பிரமுகா்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.