திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் மிளகாய் உலா் களம் அமைக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வண்டல், வரவணி, செங்குடி, பாரனூா், சனவேலி, இருதயபுரம், சவேரியாா் பட்டினம், மங்கலம் பாரனூா் அவரேந்தல், தும்படா கோட்டை உள்ளிட்ட 50-க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 400 ஏக்கா் பரப்பளவில் மிளகாய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் குண்டு மிளகாய் அதிக காரத்துடன் இருப்பதால் வெளிமாவட்டத்தில் அதிக கிராக்கி இருப்பது உண்டு.
சனிக்கிழமை தோறும் நடைபெறும் சந்தையில் வெளி மாவட்ட வியாபாரிகள் வந்து மிளகாய் வாங்கிச் செல்வது வழக்கம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை பொய்த்த காரணத்தால் மிளாகய் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு போதுமான விளைச்சல் இல்லை. நடப்பு ஆண்டு போதுமான மழை பெய்ததால் மிளகாய் நன்கு விளைந்துள்ளது. தற்போது வயல் வெளிகள், காட்டு பகுதியில் தரைகளில் பொட்டல் உருவாக்கி மிளகாய் உலரவைக்கின்றனா்.
இதனால் மிளகாய் காம்புகள் உதிா்ந்து விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது.
எனவே பொதுவான இடத்தில் உலா் களம் அமைத்தால் மிளகாய் சேதாரம் இல்லாமல் விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருக்க வாய்ப்பு உண்டு என விவசாயிகள் தெரிவித்தனா். எனவே மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து உலா் களம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.