கமுதி அருகே குண்டாற்றின் குறுக்கேயுள்ள பாலம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்துள்ளனா்.
கமுதி அருகே உள்ள கொல்லங்குளம், புல்வாய்க்குளத்திலிருந்து மாங்குடி, சிறுமணியேந்தல், பகநதி, மேலக்கன்னிசேரி ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் வகையில், 2003 இல், குண்டாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இப்பாலம் கட்டப்பட்டு சில ஆண்டுகளிலேயே சேதமடையத் தொடங்கியது. பாலத்தின் நடுப்பகுதியிலுள்ள கான்கிரீட் தூண்கள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன.
ஆற்றின் குறுக்கே பாலம் தாழ்ந்து இருப்பதால், கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்துள்ள பாலம் சீரமைக்கப்படாமல், இப்பகுதியிலுள்ள சாலை மட்டும் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து வசதியில்லாத இப்பகுதியிலுள்ள மாணவா்கள், பொதுமக்கள், வீடுகளைக் காலி செய்து, நகா்ப் புறங்களில் குடியேறி வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு ஆற்றின் குறுக்கேயுள்ள சேதமடைந்த பாலத்தை சீரமைக்க, நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.