ராமநாதபுரம்

குந்துகாலில் கடல் அரிப்பால் சேதமுறும் விவேகானந்தர் மணிமண்டபம்!

11th Jun 2020 03:54 PM | ஜெ. முருகேசன்

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் சீமையை சேதுபதி மன்னர்கள் ஆண்ட காலத்தில் இந்திய முழுவதிலும் ஆன்மிகப் பணியில் ஈடுபட்டு வந்தார் சுவாமி விவேகானந்தர். அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடந்த சர்வ சமய மாநாட்டில் விவேகானந்தர் கலந்துகொள்ள ஏற்பாடு செய்தவர் அப்போதைய ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி.

மும்பையில் இருந்து நீராவி கப்பல் மூலம் 1893 ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி புறப்பட்டு, அமெரிக்காவில் சிகாகோ சென்று அங்கு சொற்பொழிவை முடித்த விவேகானந்தர், 1897 ஆம் ஆண்டு இலங்கை வழியாக நீராவி கப்பலில் பாஸ்கர சேதுபதி மன்னருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி ஐரோப்பிய சீடர்களுடன் இறங்கினார்.

ADVERTISEMENT

அவரை மன்னர் பாஸ்கர சேதுபதி பரிவாரங்களுடன் சென்ற குந்துகாலிட்டு வரவேற்று ராமேசுவரம் ராமநாத சுவாமி  கோயிலுக்கு அழைத்து சென்றது என்பது வரலாற்றுக் குறிப்பு.

இந்த நிலையில், பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் விவேகானந்தரின் வரலாற்று நிகழ்வை அறிந்துகொள்ளும் விதமாக அந்தப் பகுதியில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

கடந்த 2009 ஆண்டு தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பில் 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ராமகிருஷ்ண மடம் சார்பில் 1.5 கோடி சேர்த்து சுவாமி விவேகானந்தருக்கு கடற்கரையில் இருந்து 10 மீட்டர் தொலைவில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.

இந்த மண்டபத்தில் சுமார் 6 அடி உயரத்தில் சுவாமி விவேகானந்தர் வெண்கலச் சிலை, உயர்ரக பிளாஸ்டிக்கில் 5 அடி உயரத்தில் பாஸ்கர சேதுபதி சிலையும், சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக பணிகள் குறித்து புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டது.

இந்த மணிமண்டபத்திற்கு நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், விடுமுறை நாள்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லுகின்றனர்.

சுவாமி விவேகானந்தர் மணிமண்டபத்தை ராமேசுவரம் ராமகிருஷ்ண மடத்தினர் பராமரித்து வருகின்றனர். சுவாமி விவேகானந்தர் வந்து இறங்கிய ஜனவரி 26 ஆம் தேதி ஆண்டுதோறும் அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சி தத்ரூபமான நடத்தப்படும்.

இதைக் கான ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இந்த நிலையில், பாம்பன் குந்துகால் பகுதியில் 70 கோடி மதிப்பிட்டில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காகக் கரையில் இருந்து 100 மீட்டர் வரையில் கடலுக்குள் தூண்கள் அமைத்துக் கடல் நீரோட்டம் தடுக்கப்பட்டது.

இதனால் மற்றொரு கரையோரத்தில் உள்ள சுவாமி விவேகானந்தரின் மணிமண்டபப் பகுதியில் கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பு தொடங்கியது.

சிறிது சிறிதாகத் தொடங்கி, தற்போது 10 மீட்டர் அளவிற்கு கடல் அரிப்பு ஏற்பட்டு மணிமண்டபத்தின் தடுப்பு சுவரையும் அரித்துக் கொண்டிருக்கிறது. மேலும் கடல் அரிப்பைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட 40 மீட்டர் வரையிலான சுவரும் உடைந்து சேதமடைந்துவிட்டது.

மணிமண்டபத்தைப் பாதுகாக்கும் வகையில் ராமகிருஷ்ண மடம் சுவாமி நியமானந்தா தலைமையில் 1.50 டன் கற்கள் கொண்டு செல்லப்பட்டுக் கடல் அரிப்பு ஏற்படும் பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டது. ஆனால் அந்தத் தடுப்பும்  பின்னர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டது.

"இந்த நிலையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மணிமண்டபத்தைப் பாதுகாக்க, 30 அடி வரை கடலுக்குள் கருங்கல் மூலம் தடுப்புச் சுவர் அமைத்தால் மட்டுமே  முடியும்.

"இன்னும் மூன்று மாதங்களுக்கு தென் கடல் பகுதியில் கடல் காற்று மற்றும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.

"இதனால் கடல் அரிப்பைத் தடுக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செய்ய வேண்டும்" என்றும் சுவாமி நியமானந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.

பாம்பன் குந்துகால் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க  சுவாமி விவேகானந்தர் மணிமண்டபம் கடல் அரிப்பால் சிதைந்து கடலுக்குள் செல்வதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் ஒருமித்த வேண்டுதலாகும். 


 

Tags : Vivekananda Vivekananda Rock Memorial Swami Vivekananda Manimandapam சுவாமி விவேகானந்தர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT