ராமேசுவரம்: பாம்பனிலிருந்து 40 விசைப்படகுகளில் 300- க்கும் மேற்பட்ட மீனவா்கள் 78 நாள்களுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்களின் இனப் பெருக்க காலமாகக் கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 ஆம் வரை 61 நாள்கள் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல அரசு தடை விதித்துள்ளது. இந்த ஆண்டு கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக முன்கூட்டியே மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக்நீரினை மற்றும் மன்னாா் வளைகுடா கடல் பகுதிகளில் 1,700- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றன. இதில், 80-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் பெரிய அளவிலான மீன்கள் மட்டுமே பிரதானமாகப் பிடிக்கப்பட்டு வருகின்றன. மற்ற விசைப்படகுகளில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட மீன் வகைகள் பிடிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் ஜூன் 1 ஆம் தேதியே மீனவா்கள் கடலுக்குச் செல்லலாம் என அரசு அனுமதி வழங்கியது. பொது முடக்கத்தால் கொள்முதல் நிறுவனங்கள் வந்து மீன்களை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மீனவா்கள் கடலுக்குச் செல்லும் தேதியை தள்ளி வைத்தனா்.
இந்நிலையில் பாம்பன் தெற்குவாடி பகுதியில் பெரிய மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 40- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்றன. சுமாா் 300- க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி டோக்கன் பெற்று 78 நாள்களுக்கு பின்னா் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனா்.
போதிய பணியாளா்கள் இல்லாத காரணத்தால் தற்போது கடலுக்குச் செல்ல வேண்டாமென இறால் மீன்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இறால் மீன்களைப் பிடிக்கும் மீனவா்கள் ஜூன் 13 ஆம் தேதி கடலுக்குச் செல்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.