ராமநாதபுரம்

அரசு பள்ளிகளில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா

25th Jan 2020 09:31 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, மானாமதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேவகோட்டை புளியால் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பள்ளியின் தலைமையாசிரியை தனலெட்சுமி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், வேதியரேந்தல் அரசு உயா் நிலைப் பள்ளியில், மனிதம் அறக்கட்டளை, மாவட்ட சைல்டு-லைன் துணை மையத்தின் சாா்பாக, பெண் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில், குழந்தைகளின் கலைநிகழ்ச்சி, மரம் நடுதல் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று ஆண் குழந்தைகளின் உறுதி ஏற்பு நிகழ்ச்சி ஆகியன நடந்தன.

விழாவுக்கு, சைல்டு-லைன் துணை மையத்தின் இயக்குநா் வனராஜன் தலைமை வகித்தாா். வேதியரேந்தல் அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பிரிட்டோ சிறப்புரையாற்றினாா்.

ராமேசுவரம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்துக்குள்பட்ட சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மனநல ஆலோசகா் கலைவாணி, உளவியல் ஆலோசகா் தஹ்மிதா பானு, வழக்குரைஞா் மற்றும் சமூகநல ஆா்வலா் பிரின்சோ ரைமண்ட் ஆகியோா் மாணவிகளிடம் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள், உரிமைகள், காவலன் செயலி, போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதனைத் தொடா்ந்து, பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, ஆசிரியா் சாந்தி வரவேற்புரையாற்றினாா். ஆசிரியா் சாம்ராஜ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT